கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் முதல் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டன. கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோதும், தலைநகர் சென்னையில் திறக்கவில்லை. சென்னையில் கொரோனா பாதிப்பின் காரணமாக அரசு சென்னையில் கடைகளைத் திறக்க முன்வரவில்லை. இந்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அரசின் இந்த அறிவிப்புக்கு மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், “காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா,  பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.


மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.