Kamal Hassan announce his new party name on 21st Jan

வரும் பிப்ர . 21 ஆம் தேதி புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், ராமநாதபுரத்தில் அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி குறித்து நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்து பேட்டி அளித்தபோது அதனை எதிர்த்து தமிழக அமைச்சர்கள் தாறுமாறாக பேட்டி கொடுத்தனர். இதையடுத்து அதிமுக – கமல் இடையே பெரும் வார்த்தைப் போர் மூண்டது.

நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து செய்து வந்த விமர்சனங்கள் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்பதையே காட்டியது.சமூக ஆர்வலர்களும் கமலஹாசன் அரசியலில் குதிப்பார் என்றே கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளில், நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் முதல்கட்டமாக மையம் விசில் என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இதனிடையே கடந்த மாதம் 31 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தும் புதிய கட்சி தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் கமல்-ரஜினியைச் சுற்றியே உருவாகும் வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், அடுத்தக் கட்டமாக தனது கட்சியின் பெயரை பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எனது சொந்த மாவட்டமான இராமநாதபுரத்தில் எனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்க உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது என் நாடு..இதைத் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என அந்த அநிக்கையில் கமல் தெரிவித்துள்ளார். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை நோக்கிய பயணம்தாள் இது என்றும் உங்களின் ஆதரவோடு இந்த பயணத்தை தொடங்குகிறேன் என்றும், கரம் கோர்த்திடுங்கள் களத்தில் சந்திப்போம் என்றும் கமல் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்



முதல்கட்டமாக இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.