நடிகர் கமல் ஹாசனிடம் அரசியல் தெளிவு உள்ளது என்றும் அவரது பாதை என்னவென்பது தெளிவாகவே தெரிவித்து விட்டதாகவும் தமிழக முன்னாள் காங். கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறும்போது, அவரிடம் அரசியல் தெளிவில்லை என்றும், ஆன்மீக அரசியல் என்று குழப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், செய்தியாளர், ரஜினி கமல் அரசியல் பிரவேசங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்றும் இருவரில் யார் அரசியலுக்குப் பொருத்தமானவர் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்குள் கால் பதித்து விட்டார். மதுரையில் நடைபெற்ற அதற்கான விழாவில் தானாக சேர்ந்த பெருங்கூட்டம் அவருக்காக கூடியிருந்தது.

அப்போது அவரும் கூட மேடையில் தெளிவாக பேசினார். இப்போது அவர் பேசுவதும், மக்களுக்கு நன்றாக புரிகிறது. ஆனால், திரஷ்டி படிகாரம் போல், அதே மேடையில் கெஜ்ரிவாலைப் பேச வைத்து விட்டார். காங்கிரசையும், திமுகவையும் கெஜ்ரிவால் தாக்கிப் பேசியது சரியல்ல என்றும், எதிர்காலத்தில் கமல்ஹாசன் இந்த போக்கை தவிர்க்க வேண்டும் என்றார். மொத்தத்தில் நடிகர் கமல் ஹாசனின் அரசியல் ஆரம்பம் நன்றாகவே இருக்கிறது என்றும், அவரது பாதை என்னவென்று தெளிவாகவே தெரிவித்துவிட்டார்
என்றும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஈ.வி.கே.எஸ்.இ. கூறும்போது, ரஜினியிடம் அந்த தெளிவு இல்லை. ஆன்மீக அரசியல் என்று குழப்புகிறார். காவிரி அரசியல் என்று அவர் வெளிப்படையாக சொல்லிவிட்டுப் போகலாம். பாஜகவினர்தான் ரஜினியை பின்னாலிருந்து இயக்குபவர்கள் என நான் உறுதியாக நினைப்பதாக இளங்கோவன் கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை குறித்து பேசுகையில், ஜெயலலிதா சிலையின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு பழைய நடிகை அங்கமுத்துவின் ஞாபகம்தான் வருகிறது என்றார்.