கட்சியில் யாரும் தங்களது மதத்தை பின்பற்றி கடவுளை வழிபட எந்த தடையும் இல்லை. நான் பகுத்தறிவாளன். வழிபாடு செய்யுமாறு என்னை கூறாதீர்கள் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி வாய்ப்புகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கமல் பேசுகையில்;- கட்சியில் யாரும் தங்களது மதத்தை பின்பற்றி கடவுளை வழிபட எந்த தடையும் இல்லை. நான் பகுத்தறிவாளன். வழிபாடு செய்யுமாறு என்னை கூறாதீர்கள். பிற கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது கண்ணை மூடிக்கொண்டு ஒரு கட்சியை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ கிடையாது. தமிழக அரசின் செயல்பாடுகளில் நமக்கு பலவிதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, தமிழகஅரசு மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என்பதாலேயே, அந்த கொள்கையை நாம் ஆதரிக்க முடியாது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது என்பது நம் கொள்கை.

மக்கள் பணிகளை செய்யவந்ததற்கு முரணான கூட்டணியை ஒருபோதும் அமைக்க மாட்டோம். மக்கள் நீதி மய்யம்ஜனநாயக கட்சி. இங்கு இருக்கும் அனைவரும் நம்கொள்கைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஒவ்வொருதொண்டனுக்கும் கட்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டனையும் கட்சி நிர்வாகிகள் மதிக்க வேண்டும்.

என் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாட்களை மக்கள் நலனுக்காக பணியாற்ற வந்துள்ளேன். எனவே, கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டால் கட்சியை கலைத்துவிட்டு வேறுஅமைப்பை தொடங்கி விடுவேன் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.