சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக்கொண்டு வர மாட்டேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கமல் கடுமையாகச் சாடி பேசியது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு கமலை சமூக ஊடங்களில் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவரை கடுமையாகத் தாக்கி பேசினார். குறிப்பாக 2017-ல் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏற்பட்ட அமளியில் ஸ்டாலின் சட்டை கிழிந்தது. கிழிந்த சட்டையுடன் வெளியே வந்து மீடியாக்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அந்தச் சம்பவத்தை நினைவுப்படுத்தி கமல் பேசியது திமுகவினரை உஷ்ணப்படுத்திவிட்டது. பதிலுக்கு சினிமாவில் கமல் அரைகுறை ஆடையுடன் தோன்றிய படங்களைப் போட்டு கமலை விமர்சித்து வருகிறார்கள். 

சம்பந்தமே இல்லாமல் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்ஷ்ராவின் அரைகுறை உடைகளுடன் உள்ள படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கமலுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார். 

”பொதுவாக அரசியலில் உடை அணிவதில் சில மரபுகள், நெறிமுறைகள் உண்டு. கைத்தறி மற்றும் கதர் வெள்ளுடை வேட்டி சட்டையில் தொடங்கி இன்று வண்ணங்களில் பேண்ட் சட்டை போட்டு மேடை ஏறுவதும் உண்டு. அதில் குறை காண முடியாத அளவிற்கு முறையானதாக இருக்கும். கல்லூரிகளில் கூட முறையான(Formal dress) உடைக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், உலகறிவு பேசும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு முறையான உடை அணியவேண்டும் என்ற அறிவு மட்டுமல்ல, முட்டிக்கு கீழ் கிழிந்த ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த படத்தை காண நேர்ந்தது. 

சமூக வளைத்தளங்களில் இருந்தது. இது உண்மையான....? அரசியலில் பின்நவீனத்துவம், விமர்சனம், எதிர்வினைகள் என்பது ஏற்கத்தக்கது. ஆனால் கமல்ஹாசனின் உளறல்கள் அத்தகைகதயது அல்ல. ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் காட்சி அமைப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. அதாவது அப்பா மகளை அடைய விரும்புவதும் , மகன் தாயை அடைய விரும்புவதுமாக இருக்கும். இது அரசியல் தத்துவார்துக்கு முரண் ஆகும். அவரது சினிமா காட்சிகள் எவ்வாறு ஏற்க முடியாயததோ அப்படித்தான் அரசியல் உளறல்களும் உள்ளன. 

அவரது தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசனை அறிவேன். மிகவும் மென்மையானவர் மட்டுமின்றி தீர்க்கமாகச் சிந்தித்து பேசுகிறவர். 1970 நெடுமாறன் மதுரையில் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு வருவார். அவர் எனக்கு நல்ல பழக்கம்.அவரது மகனா இப்படி குழம்பிப் போய் தன் ரசிகர்களையும் குழப்பி வருகிறார்? அரசியலில் அதிகம் உழைத்து தியாகம் செய்து நேர்மையான பலர் ரணப்பட்டு காணாமல் போன துயரங்களும் உண்டு. சில ஞானசூனியங்கள் எந்த களப்பணி இல்லாமல் திடீர் அதிர்ஷ்டத்தில் கோபுரத்தில் உச்சியில் ஒட்டிக் கொண்ட குப்பைகளும் உண்டு என்பதை நினைவூட்டக்கடமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பினராய் விஜயுடன் கமல் சந்தித்தபோது முட்டிக்குக் கீழே கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பதையும் ராதாகிருஷ்ணன் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.