சினிமாவில் கார்ப்பரேட் நடிகராக வலம் வந்த கமல்ஹாசன், அரசியலிலும் அதே கார்ப்பரேட்தனத்தை புகுத்தினார். கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் தனது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி 5% வாக்குகளை பெற்றுவிட்ட நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் மூலம் தமிழக முதல்வராகியே தீருவது எனும் வெறித்தனம் அவருக்குள் புகுந்தது.
 
இதனால் மோடியை இரு முறை பிரதமராக்கிய, நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்கிய, ஜெகன்மோகன் ரெட்டியை அதிரிபுதிரியாய் முதல்வராக்கிய பெருமை பிரஷாந்த் கிஷோர் எனும் பீகார் மாநில நபரை சாரும். இவரது ‘ஐபேக்’ எனும் அரசியல் கன்சல்டன்ஸி நிறுவனம்தான் இந்த மேஜிக்குகளை செய்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததுமே பிரஷாந்த் கிஷோரிடம் பேசி, தனது ம.நீ.ம.வின் வெற்றிக்காக உழைக்க கேட்டார் கமல். இவர் கேட்ட பிறகு அ.தி.மு.க.வும் பிரஷாந்தை அணுகியது. ஆனால் தொழிலில் நேர்மையை வைத்திருக்கும் பிரஷாந்த், முதலில் அணுகியவர் எனும் அடிப்படையில் கமலோடு அக்ரிமெண்ட் போட்டார். உடனே அ.தி.மு.க. அதிர்ந்தது. என்னவோ தமிழகத்தில் ஆட்சியையே பிடித்துவிட்டது போல் ம.நீ.ம.வும் குதித்தது. 

கமலுக்காக களம் இறங்கிய ஐபேக் டீம் துவக்கத்தில் ஒரு சர்வேவை எடுத்து கொடுத்தது. அதன் ரிசல்டை அடிப்படையாக வைத்து ம.நீ.ம.வில் புதிய பொறுப்புகளை கொண்டு வருவது, மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய பெண் நிர்வாகிகளை நியமிப்பது என பல் அதிரடிகளுக்கு ஆணையிட்டார் கிஷோர். கமலும் அதை டக் டக்கென செய்து முடித்தார்.
 
இந்த நிலையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சர்வேக்களின் படி பிரஷாந்த் ஒரு முடிவுக்கு வந்தாராம். அது, தமிழகத்தில் இன்னும் 90%க்கும் மேல் கமலின் கட்சி ரீச் ஆகவும் வளரவும் வேண்டியிருக்கிறது. இப்போது இருக்கும் நிலையை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கவே முடியாது. குறிப்பாக 2021 தேர்தலில் கமலால் எந்த வெற்றியையும் பெற முடியாது, அதற்கு அடுத்த தேர்தலில் அதாவது 2026 தேர்தலில் வேண்டுமானால் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்! என்று சொல்லியிருக்கிறார். இது கமலை அப்செட் செய்திருக்கிறது. ‘நோ! நோ! இப்பவே முயற்சி பண்ணலாம்’ என்றாராம். டென்ஷனான பிரஷாந்த் பொட்டியை தூக்கிட்டு கிளம்பிவிட்டார். 

ஆக கமல்ஹாசனின் தமிழக முதல்வர் கனவானது இந்த தேர்தலை பொறுத்தவரையில் பணால் ஆகிவிட்டதாக அவரது கட்சியினர் கலங்குகிறார்கள்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 


ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரனோ “பிரஷாந்த் கிஷோர் யாருக்காவும், உழைக்கமாட்டார். ஆலோசனைகளை மட்டுமே சொல்வார். அவர் துவங்கிய ஐபேக் நிறுவனம் தனியாகத்தான் செயல்படுகிறது. அந்நிறுவன ஊழியர்கள் இப்பவும் எங்களுக்காகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்கிறார். 
பிரஷாந்த் இப்படி பொசுக்குன்னு கிளம்பிட்டா, நம்மவர் என்னதான் பண்ணுவார்? அரசியல் சமுத்திரத்துல குதிச்சிருக்கிற புது போட்டியாளரான அவருக்கு யாரைத் தெரியும்! எங்கே போவார்? என்பதே அவரது கட்சியினரின் கலக்கம்.