புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எந்த கட்சியும் உரிமை கொண்டாடக் கூடாது, அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் பெயரைச் சொல்லக்கூட நடிகர் கமலஹாசனுக்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் கே.சி சங்கரலிங்க நாடார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

கமலஹாசன் டுவிட்டரில் பதிவு செய்த கருத்து பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது அவருக்குதான் பொருந்தும். அவர்தான் எம்ஜிஆர் தொண்டர்களின் காலையும், அதிமுகவினரின் காலையும் பிடித்து வருகிறார். போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே என்றுதான் கமலுக்கு நான் கூற விரும்புகிறேன். எம்ஜிஆரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாடக்கூடாது. எம்ஜிஆர் பெயரை சொல்லக்கூட கமலுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் நினைப்பார். 

சந்தர்ப்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்துவதே கமலஹாசனின் நோக்கமாக உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் மக்களின் ஆதரவு அதிமுகவுக்குதான். பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரச் சீரழிவு, குடும்ப சீரழிவுக்கு பிக்பாஸ் துணை போகிறது. கமலுக்கு கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லை. சமூக கலாச்சாரத்தை ஒழிக்கும் கமல் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள், அவருக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, கமல் தான் தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.