Kamal Haasan invited to the All India Conference of Marxist Party

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதில் பங்கேற்க நடிகர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் எனக் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் மாநாடு

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஐதராபாத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநாடு நடக்கிறது. இதில் கடைசி நாளில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு நடிகர் கமல் ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

கேரள முதல்வருடன் சந்திப்பு

சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, ஓணம் பண்டிகையையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அப்போது நிருபர்களிடம் பேசிய கமல் ஹாசன், “ நான் ஒருவிஷயத்தை கூறிவிடுகிறேன், என்னுடைய நிறம் காவியல்ல. பெரும்பாலான எனது ஹீரோக்கள் இடது சாரிகள்தான்’’ என்று தெரிவித்தார்.

அழைப்பு இருக்கும்?

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரங்கள் கூறுகையில், “ ஐதராபாதில்அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் மாநாட்டுக்கு அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்களில் நடிகர் கமல் ஹாசனும் ஒருவர் என்பதால், பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இதில் பங்கேற்க ஏராளமான அறிஞர்களும், சிந்தனையாளர்களும், கலைஞர்களும் அழைக்கப்பட உள்ளதால், அதில் நடிகர் கமல் ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்படும்’’ எனத் தெரிவிக்கின்றன.

நட்புறவு

மேலும், ‘ஹே ராம்’, ‘விஸ்வரூபம்’ ஆகிய படங்கள் வௌியானபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் நட்பு பாராட்டிய நடிகர் கமல், அவரைச் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. சீதாராம் யெச்சூரிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை ஒரு ஊடக குழுமம் சார்பில் அளிக்கப்பட்டபோது, அவருக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டணியா?

நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி வைப்பீர்களா? என சீதா ராம் யெச்சூரியிடம் நிருபர்கள் கேட்டபோது, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி சிறந்த மனிதர் ஒருவர் வருவார். அனைத்து தரப்பினரிடமும் தொடர்பில் இருந்து வருகிறோம். முதலில் அவர் கட்சி ஒன்றை அறிவிக்கட்டும். அதுவரை நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் கொள்கைகளை ஒத்த கட்சிகளுடன் கூட்டணிக்காக பேசி வருகிறோம். ஆனால், அது தேர்தல் கூட்டணி அல்ல. அர்த்தமுள்ள கூட்டணியாக இருப்போம்’’ என்றார்.

மேலும், இயக்குநர் ஷியாம் பெனகல், நடிகர் கிரிஷ் கர்நாட் ஆகியோரும் மார்க்சிஸ்ட்மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிக் கட்சி?

தற்போது, தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழலையும், அதிமுக அரசையும் நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார், அதேசமயம், தி.மு.க. வுக்குஆதரவாக எந்த கருத்தையும் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதால், தனியாக நடிகர் கமல் ஹாசன் கட்சி தொடங்குவார் எனத் தெரிகிறது.