சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. 5 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த வாரம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நாக்கை அறுக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

  கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது. அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பாக வந்தது. 

அப்போது, கமலின் பிரச்சார வீடியோவை பார்த்த நீதிபதி, கோட்சேவிற்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.10,000 மற்றும் 2 நபர் உத்தரவாதத்தில் கமலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.