தமிழக உள்ளாட்சித் தேர்தலில் களம் காணாமல் கமல்  மெளனமாக இருந்ததே காரணமாக தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். எம்.பி.தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகும் தனியாக களம் கண்ட நீதி மய்யம், ஒரு இடமாவது வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும், உள்ளாட்சித் தேர்தலைத் தவிர்த்ததற்கு பின்புலத்தில், சட்டசபைத் தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருவதே காரணம் என்கிறார்கள்.

திருச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய கமல்ஹாசன், "திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை. இதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. 2021ல் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். கமலின் இந்த வார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டதற்கு காரணம், அவரது பேட்டி வெளியாகி சில மணி நேரம் கழித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி திமுகவை எதிர்த்து வெளியிட்ட ஒரு காட்டமான அறிக்கை.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ்-திமுக ஆகிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், ஓரணியில் போட்டியிட்டன. இந்த நிலையில் தான், அழகிரி தனது அறிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், மறைமுக தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டில், கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் அழகிரி. அடுத்த அரைமணி நேரத்தில் தனது அறிக்கையில் இருந்து பின் வாங்கினார். இதனை மனதில் வைத்துக் கொண்டு இன்று காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் எதிர்கட்சிகள் நடத்திய கூட்டத்தை திமுக புறக்கணித்து விட்டதாக கூறுகிறார்கள்.