காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு நிறைவடைந்தது. ஆனால் வாரியம் அமைக்கப்படவில்லை.

6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் தெரிவித்தது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் இருந்தே தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்தன.

தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும், முறையான அழுத்தம் கொடுத்துவருவதாக ஆளும் அதிமுகவும் மாறி மாறி தெரிவித்து வந்தன.

ஆனால் கடைசிவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இதற்கிடையே, அதிமுக எம்பிக்கள், அரி, அருண்மொழித்தேவன் உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்தனர். 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், இரண்டு அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்தால் எனது பாராட்டுகள் என தெரிவித்தார். 

அப்படியென்றால், அதிமுக எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்கிறீர்களா? உங்கள் வலியுறுத்தலை ஏற்பார்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், நான் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என கூறவில்லை. அவர்களாக முன்வர வேண்டும். நான் சொன்னால் அவர்கள் கேட்பார்களா? நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என்றுகூடத்தான் நான் சொன்னேன். ஆனால் நடந்ததா என கமல் கேள்வி எழுப்பினார்.