kamal advised tamilnadu people to conserve water

மழைநீரை சேமிப்பதுதான் தற்போதைய சூழலில் தமிழர்களின் தலையாய கடமை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அரசு விரைந்து செயல்பட்டது போல, இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுப்பதிலும் மும்முரமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

காவிரி விவகாரம் குறித்து பேசிய கமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரியிலிருந்து தமிழகத்திற்கான தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், தமிழக மக்களும் நீரை சேமிப்பது முக்கியம். விவசாயிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமே தண்ணீரை சேமிக்க வேண்டும். அதுதான் தற்போதைய நிலையில் தமிழர்கள் செய்ய வேண்டிய முக்கியமான செயல். மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என கமல் வலியுறுத்தினார்.

அதேபோல், மீனவர்கள் புயலில் சிக்கிக்கொள்வதை தடுக்க, வானிலை முன்னெச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்ப வேண்டும் என ஊடகங்களுக்கு கமல் கோரிக்கை விடுத்தார்.