பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள்தான்  தினகரனுக்கு ஆதரவு, அவர்களுக்கும் ’தகுதி நீக்கம்’ எனும் பிட்டை போட்டு பியூஸை பிடுங்கிவிட்டோம்! என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது எடப்பாடி மற்றும் பன்னீர் அணி. 

இந்த சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஜெயித்து, அவரது டீமின் எண்ணிக்கை 19 ஆனது. இது போதாதென்று 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தினா கோஷ்டிக்கு ஆதரவாக கூட தீர்ப்பு வரலாம் என்று சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது பழனிசாமி - பன்னீர் அணியை வெகுவாகவே அப்செட் ஆக்கியிருக்கும் நிலையில், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சமீபத்தில் தினகரனின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். 

இவரது அணி தாவலுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்க, தற்போது வாயை திறந்திருக்கும் அவர் “நான் முதல்வருக்கு ஆதரவு கொடுத்தபோது ‘உனக்கு என்ன செய்ய வேண்டும்?’ என கேட்டார். அதற்கு நான் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றேன். அதற்கு அவர் கண்டிப்பாக செய்து தருவதாக கூறினார். ஆனால் அதற்குள் மாவட்ட செயலாளரான குமரகுரு, தனது உளுந்தூர் பேட்டைக்குள் கலெக்டர் ஆபீஸை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார். கூடவே அதிகாரிகளையும் தன்  கைக்குள் வைத்தபடி இதை சாதிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முதல்வர் தரப்பு முழு சப்போர்ட்டில் இருக்கிறது. 

இதனா, இனி இவர்களோடு இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்கிற உண்மையை உணர்ந்து தலைவர்  தினகரன் பக்கம் வந்துவிட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய தினகரனால்தான் முடியும்.”என்று சரம் சரமாக பூ சுற்றுகிறார். 

ஆனால் ஏரியாவிலோ “அவரு சொந்த ஆதாயத்துக்காக அணி மாறியிருக்கிறாருங்க. அவரோட அப்பா அய்யப்பன், எங்க கட்சியோட ஒன்றிய செயலாளர்தான். அவருக்கே  இவரோட செயல் பிடிக்காம போயி, தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு. 

சும்மா மக்கள் பெயரை சொல்லி சீன் போடுறாரு.” என்கிறார்கள். 
நடத்துங்க நடத்துங்க.