2017-ம் ஆண்டில் எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை ஏன் இன்னும் தகுதி நீக்கம் செய்யவில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.


தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா மனு அளித்தார். இந்த மனு மீது விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மூவரும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
சபாநாயகர் தனபால் அளித்துள்ள நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். “எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக நான் வாக்களித்ததால்தான் தற்போது அவர் முதல்வராக உள்ளார். அதிமுகவுக்கு எதிராக நான் செயல்படவில்லை. சபா நாயகரின் நோட்டீஸூக்கு சட்டப்படி விளக்கம் அளிப்பேன். கட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை இன்னும் ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை ” என்று கேள்வி எழுப்பினார் பிரபு.
இதேபோல கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, “தினகரனுடன் உள்ள புகைப்படத்தில் எல்லோருமே இருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்தவுடன் முறையாக விளக்கம் அளிப்போம்” என்று தெரிவித்தார்.