திருவண்ணாமலை  அருகே ஒரு வீட்டில் கள்ளச்சாரயம்  விற்பதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை நகர காவல்துறை அதிகாரிகள், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 200 கள்ள சாராய பாட்டில்கள் மற்றும் சாராய கேன்கள் இருந்துள்ளன. 

அதனை கைப்பற்றிய போலிஸார் அருண்குமார்  என்பவரையும் அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரையும் காவல்நிலையம் அழைத்து  சென்றனர். அருண்குமார் பாமகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார் அவர்  காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும் பாமகவினர் அதிர்ச்சியாகினர்.

மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் கட்சி மற்றும் மது விலக்கு என்பதை கட்சி கொள்கையாகவே வைத்துள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகியே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டார் என்பது கட்சிக்கு கேவலம் என நினைத்த அக்கட்சியினர் அருண்குமாரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம், பேசியுள்ளனர். 

இதனால் ஆகஸ்ட் 26ந்தேதி மாலை கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆகஸ்ட் 27ந்தேதி காலை வரை வழக்கு போடாமல், கைது செய்ததை கணக்கு காட்டாமல் வைத்திருந்தனர் காவல்துறையினர். 

ஆளும்கட்சியான அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதால், அதனை பயன்படுத்தி வழக்கு போடாமல் தடுக்க சில முயற்சிகளை பாமக நிர்வாகிகள் எடுத்தனர். ஆனால் அதற்குள் இந்த தகவல் வெளியே பரவிவிட்டதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது எனச்சொல்லி கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தார்கள் எனக் கூறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதே நேரத்தில்  இந்த வழக்கில் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களை பத்திரிக்கை, தொலைக்காட்சி முன்பு காட்டாமல் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பிரச்சனையை கையில் எடுத்து போராட்டட் நடத்த முடிவு செய்துள்ளது.