மு.க.அழகிரி கருணாநிதி காலத்தில் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு எப்படியாவது திமுகவில் இணைந்து விடலாம் என பலவகையில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. முரசொலி அறக்கட்டளையில் தனது மகனுக்கு பொறுப்புக் கொடுத்தால் போதும் என கேட்டுப்பார்த்தும் அழகிரியின் கோரிக்கையை சட்டை செய்யவில்லை ஸ்டாலின். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி சமீபகாலமாக திமுகவுக்கு எதிராக கொஞ்சம் குரலை எழுப்பத் தொடங்கியுள்ளார்.

ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினி கட்சியில் இணைந்து அவர் செயல்படக்கூடும் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. ரஜினியை சந்தித்து மு.க.அழகிரி அவ்வப்போது அரசியல் நிலவரங்கள் குறித்து விசாரித்து வந்தார். இந்நிலையில் அவர் ரஜினி கட்சிக்கு ஆதரவு தர இருப்பதாகக் கூறப்படுகிறது. வடமாவட்டங்களில், பாமக, தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியை வைத்து ஸ்டாலினை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். 


இத்தனை நடந்தும் மு.க.அழகிரியை பற்றி வாயைத் திறக்கவில்லை மு.க.ஸ்டாலின். மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் துளியும் ஸ்டாலினிடம் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டது. ஆனாலும் அரசியலில் இல்லாமல் வெறுமனே அழகிரியால் நாட்களை கடத்த விரும்பவில்லை. அதற்காக ஒரு பாரம்பரிய கட்சியில் இருந்த தலைவருக்கு மகனாக பிறந்துவிட்டு மாற்ருக்கட்சியில் சேர்வதா? என்கிற நெருடலும் அவருக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அந்த அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார் மு.க.அழகிரி.

 

தனிக் கட்சி தொடங்குவது, அந்தக் கட்சிக்கு கலைஞர் தி.மு.க என பெயர் சூட்டுவது என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார். புதிய கட்சியை துவங்கி, ரஜினி கட்சியோட கூட்டணி வைத்துக் கொளவது தான் அவரது திட்டம். தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் இருக்கிற சேலம், வீரபாண்டி ராஜா போன்றவர்களை தனது கட்சியில் இணைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் திமுக அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறார் அழகி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானார்கள். 

ரஜினி தனது கட்சி மாநாட்டை இந்த ஆகஸ்டில் பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையொட்டி தனது கலைஞர் திமுகவையும் மு.க.அழகிரி அறிவிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.