திமுகவின் அடுத்த தலைவர் என்று கூறப்படும் உதயநிதிக்கு தற்போது முதலே கலைஞர் செய்திகள் டிவியிலும் தூபம் போட ஆரம்பித்துவிட்டனர்.

திமுகவின் மாநில இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட பிறகு பெரிய அளவில் கொண்டாட்டங்கள் களை கட்டவில்லை. நிர்வாகிகள் நேரில் சந்தித்து உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொண்டனர். அதே சமயம் வேலூரில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ள உதயநிதிக்கு அங்கு தடல் புடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது.

தவிர ஸ்டாலினுடன் எப்போதும் ஒரு லைவ் யூனிட் கலைஞர் டிவி சென்று கொண்டே இருக்கும். அதே பாணியில் உதயநிதியுடனும் ஒரு கலைஞர் டிவி குழு செல்ல தொடங்கியுள்ளது. மேலும் உதயநிதி பிரச்சாரம் கலைஞர் தொலைக்காட்சியில் உடனுக்குடன் லைவ் செய்யப்படுகிறது. மேலும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படுவதை போலவே உதயநிதிக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகள் பில்டப்புகள் கொடுக்கப்படுகின்றன.

உதயநிதியின் பிரச்சாரம் என்கிற தனி புரோக்ராமே கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நாள் முழுவதும் உதயநிதி செய்யும் பிரச்சாரங்களை தொகுத்து அப்போது ஒளிபரப்புகிறார்கள். இந்த அளவிற்கு கலைஞர் தொலைக்காட்சியும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் சில நிகழ்ச்சிகளும் உதயநிதியை மையப்படுத்தி வர உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் அடுத்தடுத்த நாட்களில் உதயநிதி செய்தி தலைப்புச் செய்தியாகும் என்றும் பேசிக் கொள்கிறார்கள். மேலும் உதயநிதி தொடர்பான செய்திகள் நேரடியாக சித்தரஞ்சன் சாலை வீட்டில் உள்ள முக்கிய நபர்களால் கண்காணிக்கப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகளில் திருத்தம் செய்யப்படுவதாகவும் கூறுகிறார்கள். மேலும் விரைவில் சன் டிவியிலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.