வந்தவாசியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காடுவெட்டி குரு மகள் வாகனத்தை மடக்கிய பாமகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் இறப்புக்கு பிறகு பாமகவுக்கு எதிராக காடுவெட்டி குருவின் குடும்பமே களம் இறங்கியுள்ளது. அவரின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மகன் கனலரசன், மகள் விருதாம்பிகை உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தனது தந்தையை 48 நாட்கள் மயக்க ஊசி போட்டு  கொலை செய்துவிட்டனர். அவர் மருத்துவமனையில் இருந்த போது என்னையும், என் குடும்பத்தையும் பார்க்கவிடாமல் செய்து விட்டனர் என சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து விருதாம்பிகை நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது பாமகவைச் சேர்ந்த சிலர் பஜார் வீதியில் சென்ற காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை மற்றும் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி எப்படி பாமக தலைவரை பற்றி அவதூறாக பேசியது குறித்து கேள்வி எழுப்பி தகராறு செய்தனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் பிரச்சனை செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.