காடுவெட்டி குருவை மையமாக வைத்து பா.ம.க.வில் பெரும் சலசலப்பு விட்டு விட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குருவின் மரணத்தால் ‘பா.ம.க.வின் இடிதாங்கி சரிந்துவிட்டது. இனி அந்த கட்சி மீது மற்ற கட்சிகளுக்கு பயம் இருக்காது.’ என்று குரல் எழுந்தது. 

இதை தந்தை, மகன் என இரு டாக்டர்களும் ரசிக்கவில்லை. குரு இறந்து ஓராண்டு கூட கழியாத நிலையில் அவரது மகள் விருத்தாம்பிகைக்கு முறைப்பையன் மனோஜ்கிரனுடன்  திடீரென திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் குருவின் மனைவி சொர்ணலதாவுக்கு துளியும் விருப்பமில்லை. ‘சொத்துக்காக என் மகளை அந்த கும்பல் சதி செய்து திருமணம் செய்துவிட்டது.’ என்று சாடியிருக்கிறார். 

இந்நிலையில் அண்ணி சொர்ணலதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்திருக்கும் காடுவெட்டி குருவின் இரண்டாவது தங்கை மீனாட்சி...”எங்க அண்ணி சொர்ணலதா, டாக்டர் அய்யாவின் (ராமதாஸ்) உறவுக்கார பெண். அதனாலதான் அவங்ககிட்ட இருந்த குறை நிறையை கண்டுக்காம எங்கண்ணன் கட்டிக்கிட்டார். சில வருஷம் கடந்து விருத்தாம்பிகை, கனலரசன்னு ரெண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தாங்க. எங்க அண்ணியால குழந்தைகளை கவனிச்சுக்க முடியாததால எங்க தங்கச்சி சந்திரகலாவையும் அவளோட புருஷனையும்தான் கார்டியனா வெச்சு குழந்தைகளை வளர்த்தார் அண்ணன் குரு. 

இதுதான் குரு அண்ணனோட குடும்ப ரகசியம். இதைவிட இன்னொரு விஷயத்தை சொல்லவா?...எங்க அண்ணன் காடுவெட்டி குரு, உடல்நிலை மோசமாக ஆஸ்பத்திரியில இருந்தப்ப ‘ஆபரேஷன் செஞ்சா 60%  நார்மலாகிடுவார்.’ அப்படின்னு டாக்டர்கள் நம்பிக்கையா சொன்னாங்க. ஆனால், கட்சி தலைமையோ (பா.ம.க.) அந்த ஆபரேஷனுக்கு அனுமதி கொடுக்கலை. 

அந்த வகையில சொல்றோம், எங்க அண்ணன் செத்ததற்கு முழு காரணம் கட்சி தலைமைதான். இந்த தகவலை அண்ணன் இறந்த நேரத்திலேயே நாங்க வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஏற்கனவே அண்ணன் மறைவால் ஆதங்கத்தில் கிடந்த வன்னிய சொந்தங்களை உசுப்பேத்திட நினைக்கலை நாங்க. மேலும் எங்க அண்ணன் கர்ணன் மாதிரி. தான் இருக்கிற இடம் தப்பான இடம்னு கடைசி நேரத்தில் புரிஞ்சுகிட்டார். ஆனாலும் செஞ்சோற்று கடனுக்கு நன்றி செலுத்துறதுக்காக அமைதியாக இருந்துட்டார்.” என்று பாய்ந்திருக்கிறார் பா.ம.க. தலைமை மீது.