Asianet News TamilAsianet News Tamil

ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது.. திராவிட மாடல் அரசை எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்பிரமணியம்.!

சிதிலமடைந்த கோயில்களை சீரமைப்பதில்லை. பராமரிப்பதில்லை எண்ணெய் விளக்குகள் கூட ஏற்ற முடியாத பல்லாயிரம் கோயில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. அந்தக் கோயில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல், அலட்சியம் காட்டும் அறமில்லாத துறை ஆதீன மடங்களின் மீது தன் பார்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

Kadeswara Subramaniam slams DMK Government
Author
First Published Nov 16, 2022, 8:04 AM IST

ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற அறநிலையத் துறைக்கு ஆசையோ? உடனடியாக தொண்டை மண்டல ஆதினம் மடத்திலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்திற்கு புதிய மடாதிபதி நியமிக்கும் வரை, அறநிலையத்துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளர்த்ததிலும், தமிழ்ப் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியது.

Kadeswara Subramaniam slams DMK Government

தமிழகத்தில் கோயில்களில் இருந்து வரும் வருமானம் முழுதையும் எடுத்துக்கொள்ளும் தமிழக அரசு, கோயில்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் நலன்களில் துளியும் அக்கறை காட்டியது இல்லை. சிதிலமடைந்த கோயில்களை சீரமைப்பதில்லை. பராமரிப்பதில்லை எண்ணெய் விளக்குகள் கூட ஏற்ற முடியாத பல்லாயிரம் கோயில்கள் அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. அந்தக் கோயில்கள் மீதெல்லாம் அக்கறை காட்டாமல், அலட்சியம் காட்டும் அறமில்லாத துறை ஆதீன மடங்களின் மீது தன் பார்வையை திருப்புவதன் நோக்கம் என்ன?

Kadeswara Subramaniam slams DMK Government

காஞ்சிபுரம் தொண்டை மண்டலத்தின் 233-வது ஆதீனமாக திருச்சிற்றம்பலம் ஞானதேசிக பரமாச்சாரியார் கடந்த 2021-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் அறநிலையத் துறை அமைச்சரின் உறவினர் பல்லாயிரம் கோடி சொத்துள்ள ஆதீன மடத்தை கைப்பற்றும் நோக்கோடு திருச்சிற்றம்பல ஞான தேசிக பிரமாச்சாரியார் சுவாமிகளுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்த சூழலில், உடல் நலத்தை காரணங்காட்டி ஆதீனம் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கோயில் சொத்துகள் கொள்ளைபோன போதும், ஆகமங்கள் மீறப்பட்ட போதும், கோயில்களே காணாமல் போன போதும் அமைதியாய் வேடிக்கை பார்த்த அறநிலையத் துறை, ஆதீனம் பதவி விலகி விட்டார் என காரணம் காட்டி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு வேக, வேகமாக செயல் அலுவலரை நியமித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோயில்களை எல்லாம் காட்சி பொருளாக, வணிக நிறுவனமாக மாற்றியது போதாதா? ஆதீன மடங்களையும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்ற அறநிலையத் துறைக்கு ஆசையோ? உடனடியாக தொண்டை மண்டல ஆதினம் மடத்திலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.

Kadeswara Subramaniam slams DMK Government

அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் அமைச்சரின் உறவினர்கள். ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது. இல்லையென்றால் வரும் தேர்தலில் இந்துக்கள் பாடம் புகற்றுவர். தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அறநிலையத் துறையின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிட சொல்ல வேண்டும். மடாதிபதிகள் மனம் வருந்துவது அரசுக்கு நல்லதல்ல  என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios