கர்நாடக கடரோர மாவட்டங்கள்  மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கபினி அணையிலிருந்து 35 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுவடைந்திருப்பதால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு பகுதிகளில்  மிக பலத்த மழை பெய்து வருகிறது.

அந்தப்பகுதிகளில் நேற்றும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. தற்போது இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3,483 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குடகு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் நேற்று மாலையில் இருந்தே  நீர்வரத்து அதிகமானது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கபினியில் இருந்து 35 ஆயிரம் கன நீர் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து காவிரி நீர் விரைவில் தமிகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக கடலோர மாவட்டங்கள், சிக்கமகளூரு, குடகு ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.