கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தென் மேற்கு பருவமழை கொட்டி வருவிதால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அந்த அணைகளில் இருந்து  தமிழகத்துக்கு விநாடிக்கு 39 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  

கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்அணை கட்டப்பட்டுள்ளது.  மைசூரு மாவட்டம் பீச்சலஹள்ளி அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. மாநிலத்தின் முக்கியமான இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் நேரடியாக தமிழகத்திற்கு வருகிறது.

கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில் கபினி அணை  நிரம்ப இன்னும் ஒரு அடிதான் பாக்கி  உள்ளது  நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இந்த அணை வேகமாக நிரம்பி வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைப்போல குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாக இருக்கும் நிலையில், தற்போது 110 அடியை தாண்டி நீர்மட்டம் உள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால், இந்த அணையும் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

தற்போது கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி என வினாடிக்கு மொத்தம் 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.  இதையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயரும் வாய்ப்புள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.