அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவீரன் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபத் திறப்பு விழா செப்டம்பர் 17-ஆம் நாள் தியாகிகள் வீரவணக்க நாளில் நடைபெறவுள்ளது என பாமக தலைவர்  ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பாமக பெருமையோடு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அறிக்கையில்... மருத்துவர் அய்யா அவர்களின் விசுவாசத் தொண்டனாகவும், மூத்த மகனாகவும் திகழ்ந்த வன்னிய சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் நாள் உடல்நலக்குறைவால் காலமானார். மாவீரன் மறைவைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், காடுவெட்டி கிராமத்திலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கண்ணீர் உரையாற்றிய மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ மாவீரனின் ஜெ. குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும். கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் குருவின் பெயர் சூட்டப்படும். அந்த வளாகத்தில் மாவீரன் கம்பீரமாக நடந்து வருவது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

அதன்படி சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவரது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவீரன் வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில், கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில், மருத்துவர் அய்யா அவர்களால் 13.12.2018 வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்ட மாவீரன் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் 8 மாதங்களில் சிறப்பாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவீரன் ஜெ.குரு அவர்களின் மணிமண்டபத்தின் திறப்பு விழா, தியாகிகள் வீரவணக்க நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டு நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார்.  அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோரும், பா.ம.க. மற்றும் அதன் துணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.