பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்ததைவிட தற்போது, எதிரிகள் மிக ஆபத்தானவர்களாக உள்ளார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தனது 86வது பிறந்தநாளை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையிலுள்ள பெரியார் திடலில் கி. வீரமணியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திக தலைவர் கி.வீரமணி; திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கி. இதில் மூன்றாவது குழலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.

திமுக- காங்கிரஸ்- மதிமுக- இடதுசாரிகள்- விசிக- தி.க இடையே கொள்கைக் கூட்டணி உள்ளது. ஆனால், கொள்கைக்கூட்டணி வேறு, அரசியல் கூட்டணி வேறு. கொள்கைக்கூட்டணிக்கு நிரந்தர எதிரிகள் உண்டு, நிரந்தர நண்பர்களும் உண்டு. அரசியல் கூட்டணிக்கு நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை" என்றார்.

தொடர்ந்து பேசுகையில், "மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வரானால் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றை காத்து நிலைநிறுத்துவார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு, தொடர்ந்து சமூக நீதிக்கா திராவிடர் கழகம் போராடும். அதுமட்டும் இன்றி, ஆணவக்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.