பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கேலி செய்பவர்கள் இந்நாட்டின் விரோதிகள் என்று தமிழக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பு மையத்தை தமிழக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்துவைத்தார். பின்னர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கேலி செய்பவர்கள் இந்நாட்டின் விரோதிகளாகத்தான் இருக்க முடியும். எப்போதும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.


இதுபோன்ற கூட்டம், காலையில் இட்லி கொடுத்தால் ஏன் பொங்கல் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். மதியம் சாப்பாடு கொடுத்தால் ஏன் பிரியாணி கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். இந்தக் குறை சொல்பவர்கள் யாரும் நிச்சயமாக நல்லவர்களாக இருக்க முடியாது. குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், இதுவரை என்ன சமூகப் பணியை செய்தார்கள் என்று நினைத்து பார்த்தால் குறை சொல்ல மாட்டார்கள். எப்போதும் சமூக பணியில் குறை சொல்லாமல்  அரசுடன் மக்கள் இணைந்து செயல்பட்டால் இந்தியாவைவிட்டு கொரோனா வைரசை விரட்ட முடியும்.” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.