எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக் கூடாது என்ற மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு ‘மின்சார திருத்த சட்டம் 2020’ கொண்டு வர உத்தேசித்துள்ளது. இத்திட்டம் கொண்டு வரப்பட்டால், மின்சார வாரியங்கள் தனியார்மயமாகும், 30 ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
இந்நிலையில்  மின்சார திருத்தம் சட்டம் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்காகவே மத்திய மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக நிதியமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் தமிழக அரசின் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது.


அதன்படி பயன்படுத்துகிற இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை விவசாயிகளிடமிருந்து மின்சார வாரியம் கட்டாயம் வசூலிக்க வேண்டும். வசூலித்த பிறகு தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பயன்மாற்ற திட்டத்தின் மூலம் செலுத்திக்கொள்ளலாம். எந்த வகையிலும் மின்சாரத்தை இலவசமாக எவருக்கும் வழங்கக் கூடாது என்பதே மத்திய மின்சார சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும். இதை தமிழக விவசாயிகள் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.