யெஸ் வங்கியில் ஏற்பட்ட பிரச்னை இன்றைக்கு, நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த மார்ச் 2014ல் யெஸ் வங்கி வழங்கிய மொத்தக் கடன் ரூ.55, 633 கோடிதான். ஆனால், அது திடீரென கடந்த மார்ச் 2019-ல் ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்திருக்கிறது. 

யெஸ் வங்கியின் கடன் உயர்வுக்கு பின்னால் பா.ஜ.கவின் நிதியமைச்சகம் இருப்பதாகப் பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


“நரேந்திர மோடி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வங்கிக் கொள்ளைகள் தொடர் கதையாக நிகழ்ந்துவருகின்றன. மோடியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 90 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கியை ஏமாற்றும் 19 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ரூ. 53 ஆயிரம் கோடி அளவுக்கு ஏமாற்றிய 23 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துப்போகவும் அனுமதித்துள்ளனர். நரேந்திரமோடிக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் சுமார் ரூ. 26 ஆயிரத்து 306 கோடியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
பொதுவாக, பொதுத்துறை நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றன. 2019ல், வாராக் கடன் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. இதனால், பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படையைச் சிதைக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யெஸ் வங்கி விவகாரம் இந்திய நிதிச் சேவைத் துறையின் அடித்தளத்தையே தகர்த்துள்ளது. கடந்த 2004ல் தொடங்கப்பட்ட யெஸ் வங்கி, ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டுவந்தது. அதன் காரணமாகவே தனியார் துறை வங்கிப் பட்டியலில் முதல் 5 இடங்களில் யெஸ் வங்கி இடம் பெற்றிருந்தது. ஏனைய பொதுத்துறை நிறுவனங்கள் பெரு முதலாளிகளுக்குக் கடனை வாரி இறைத்து வாராக் கடன் என்ற படுகுழியில் விழுந்ததைப்போல யெஸ் வங்கியும் கடனை வாரி இறைத்து படுபாதாளத்தில் விழுந்துள்ளது.


எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மக்களின் சொத்து. மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் பா.ஜ.க அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுகிற வகையில் மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்வதில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.