மக்களவை மற்றும் 18 இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தில் தேர்தல் நெருக்கத்தில் தொடர்ச்சியாகப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

கடந்த சில தேர்தல்களாகவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக விளங்கிவருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க கொங்கு மண்டலமே காரணமாக அமைந்தது. இந்த மண்டலத்தில் உள்ள 54 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு போன்ற காரணங்களால் அதிமுக பலமாக இருக்கிறதா என்ற சந்தேகம் அக்கட்சித்தொண்டர்களுக்கு உள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் வலுவாகவே இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த மண்டலத்தில் வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காகவே நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டுவந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அவரசம் அவசரமாக அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது.


இந்த மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கருப்பணன் ஆகியோரிடம் தேர்தல் பொறுப்புகளை அதிமுக தலைமை வழங்கியுள்ளது. அவர்களும் தீவிரமாக களப்பணி ஆற்றிவருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. சேலத்தில் பிரசாரத்தை தொடங்கிய பிறகு கொங்கு மண்டல் பகுதிகளில் அவர் இன்னும் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. தற்போது 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார்.


கொங்கு மண்டலத்திலிருந்து வந்திருக்கும் முதல்வருக்கு ஆதரவு கேட்கும் வகையிலும், அவருக்கு திமுக அளிக்கும் நெருக்கடியையும் பட்டியலிட்டு பிரசாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.