திருச்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தனது தந்தை அன்பில் பொய்யாமொழி, கே.என்.நேரு வருகைக்கு பிறகு தான் ஓரம்கட்டப்பட்டார். ஆனால் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழி மறைவுக்கு பிறகு அவரது மகன் அன்பில் மகேஷ் ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவர் ஆனார். ஸ்டாலினுக்கு வலது கரமாகவும், உதயநிதிக்கு நிழலாகவும் இருந்தாலும் திருச்சி திமுக மீது அன்பில் மகேஷூக்கு தீராத காதல் உண்டு. இதனால் தான் இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவியை விட திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் பதவியை பெரிதாக நினைத்து அங்கு சென்றார் அன்பில். தலைவர் கொடுத்த பதவி என்பதால் தட்டாமல் வாங்கிக் கொண்ட நேருவுக்கு திருச்சியில் இத்தனை நாள் தான் சேர்த்து வைத்திருந்த செல்வாக்கை அப்படியே இன்னொருவருக்கு விட்டுச் செல்ல மனம் இல்லை. மாவட்டச் செயலாளர்கள் அடியோடு மாற்றப்பட்ட நிலையில் திருச்சி திமுகவில் நேருவின் பிடி கிட்டத்தட்ட தளர்ந்துவிட்டதாக பேச்சுகள் அடிபட்டன.

ஆனாலும் கூட புதிய பதவிகள், பொறுப்புகள் போன்றவற்றில் நேரு நேரடியாக தலையிட்டு வருவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தன. ஆனால் இவற்றை எல்லாம் எதிர்கொண்டு திருச்சி திமுகவை தன் வசமாக்க அன்பில் மகேஷ் தீவிரமாக உழைத்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த ஒரு வார காலமாக திருச்சி சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் திமுக பிரமுகர்கள் இல்ல திருமணவிழாவில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார் நேருவின் மகன் அருண். திருச்சியை பொறுத்தவரை அருண் நேரு என்றால் யாருக்கும் தெரியாது. காரணம் அரசியலில் இருந்து அருண் நேரு இதுநாள் வரை ஒதுங்கியே இருந்துள்ளார். நேருவும் தனது தம்பியை தான் தனது அரசியல் வாரிசாக முன்னிலைப்படுத்தினார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட பிறகு தனது குடும்பத்தில் யாரையும் கட்சிக்கு அழைத்து வரவில்லை.

இந்த சூழலில் தான் நேருவிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் தளராத நேரு, தன்னுடைய மகனை திருச்சி மாவட்ட திமுகவில் வளர்த்துவிட முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இதற்காகத்தான் தான் சென்னையில் இருக்கும் நிலையில் திமுக நிர்வாகிகள் வீட்டு திருமணம் ஒன்று விடாமல் தனது மகன் அருண் நேருவை அனுப்பி வைத்துள்ளார் நேரு. அதே சமயம் திருச்சி திமுகவில் அன்பில் மகேஷ் சொதப்பும் நேரத்தில் தனது மகனுக்கு பொறுப்பை வாங்கிவிடவே இப்படி ஒரு பிளான் என்கிறார்கள். இதன் மூலம் நேரடியாகவே மகேஷூக்கு செக் வைத்துள்ளார் நேரு.