பல ஆண்டுகளாக வாட்டிவதைத்த 2ஜி பிரச்சனையில் இருந்து கலைஞர் டிவி மற்றும் கனிமொழி ஆகியோர் முற்றிலுமாக விடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, முதற்கட்ட வேலையாக கலைஞர் டிவியை சீரமைக்கும் பணியில் இறங்க வேண்டும் என ஸ்டாலின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையோடு நின்று விடாமல் அடுத்தகட்ட நடவடிக்கையிலும் இறங்கி விட்டனர். ஏற்கனவே, முரசொலியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் ஸ்டாலினின் மகன் உதயநிதி, அரசியலிலும் தலைக்காட்ட ஆரம்பித்து விட்டார். முரசொலியில் பல மாற்றங்களைச் செய்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக உதயநிதிக்கு திமுக தலைவர் குடும்பத்தில் இருந்து பாராட்டுக்கள் வந்தனவாம். 

 

முரசொலியைத் தொடர்ந்து, கலைஞர் டிவியையும் ஒட்டுமொத்தமாக உதயநிதியின் தலைமையில் இயங்க செய்யும் வகையில் வேலைகள் நடந்து வருகிறதாம். அதன் ஒரு கட்டமாக புதிய நிர்வாகிகளை நியமிப்பது, புதிய நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது, தேவையான முதலீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டதாம்.

இதன் தொடர்ச்சியாகத்தான், மூத்த பத்திரிகையாளரும், பிரபல இதழான ஜூனியர் விகடனில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய திருமாவேலனிடம் விஐபி ஒருவர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருமாவேலனும் கலைஞர் டிவியில் செய்தி தலைமை பொறுப்பேற்க ஒப்புக் கொண்டாராம். இந்த நிலையில் கலைஞர் டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இணைந்துள்ளார்.

இது குறித்து 'ஏசியாநெட் தமிழ்' சார்பாக திருமாவேலனிடம் கேட்டபோது, நீண்ட நாட்களாகவே தொலைக்காட்சியில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே, தாம் தற்போது கலைஞர் டிவியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், எல்லா வகையான செய்திகளுக்கும் பிரிண்ட் மீடியாவை விட தொலைக்காட்சி ஊடகத்தில் அதிக இடமிருப்பதாக தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு தான் ஜூவியில் எழுதிய 'பெரியோர்களே தாய்மார்களே' என்ற தொடர் ஆடியோ வடிவில் வெளியிட்டபோதுதான், ஒலி மற்றும் ஒளி வடிவிலான காட்சி ஊடகத்திற்கு உள்ள வரவேற்பை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டதாக திருமாவேலன் கூறினார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகும் நோக்கில் கலைஞர் டிவி சீரமைக்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றனவாம். அதில் ஒரு அங்கமாகவே திருமாவேலனின் 'ஜாய்னிங்' பார்க்கப்படுகிறது.