சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். பணியிலிருந்தபோது, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஏற்க மறுப்பு தெரிவித்தார். 

இதனால், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மீண்டும் ஆணை பிறப்பித்தார். இதனால், அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறைத் தண்டனைக்குப் பின்னர், டிசம்பர் மாதம் விடுதலையானார்.

தற்போது ‘ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி அதாவது ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் நீதிபதி கர்ணன். தனது கட்சி சார்பில் 35 வேட்பாளர்களை நாடு முழுவதும் நிறுத்தியிருப்பதாகவும், தான் இந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்  மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக, அவர் சென்னை ஷெனாய் நகர் மத்திய துணை வட்டார ஆணையர் அலுவலகம் சென்றார். அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தனது வேட்பு மனுவில், 13 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் 38.50 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளகளிடம் பேசிய முன்னாள் நீதிபதி கர்ணன், மத்திய மாநில அரசுகள் சரியான நிர்வாகத்தை வழங்காததால், தான் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். தங்களது கட்சிக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய கர்ணன்  வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.