Asianet News TamilAsianet News Tamil

செங்கோட்டையனுக்கு நேர்ந்த அவமானம்...!! வெளிநாட்டிற்குப் போய் என்ன செஞ்சிங்க... சீமான் ஆவேசம்..!!

மதிப்பெண்ணைக் கொண்டு அவனது அறிவை எடைபோடாத ஒரு தனித்திறன் முறை கல்வி வேண்டும். அத்தகையக் கல்வி முறையைக் கொண்டு அருகமைப்பள்ளிகளை நிறுவி, தாய்மொழியில் பயிற்றுவித்ததாலேயே கல்வியில் முதன்மை நாடுகளாகப் பின்லாந்தும், தென்கொரியாவும் நிகழ்கின்றன.


 

just before naam tamilar party leader seeman condemned school education minister
Author
Chennai, First Published Sep 14, 2019, 11:59 AM IST

நடப்புக் கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை நடத்தவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக்கொள்கையில் இருக்கிற ஒரு கூறாகும். புதிய கல்விக்கொள்கை குறித்தத் தனது நிலைப்பாட்டை இதுவரைத் தெளிவுபடுத்தாத நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை அமல்படுத்தத் துணிவதன் மூலம் புதிய கல்விக்கொள்கையினை ஏற்கத் தமிழக அரசு தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. 

just before naam tamilar party leader seeman condemned school education minister

ஒரு மாணவனுக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவனை அத்துறையில் மேதையாக வளர்த்தெடுப்பதும், ஆளுமையாக உருவாக்குவதுமே கல்வியின் நோக்கமாகும். அதற்குப் பாடச்சுமையை மாணவனின் தோளில் ஏற்றாத, தேர்வுப் பயத்தை அவனுள் உருவாக்காத, மதிப்பெண்ணைக் கொண்டு அவனது அறிவை எடைபோடாத ஒரு தனித்திறன் முறை கல்வி வேண்டும். அத்தகையக் கல்வி முறையைக் கொண்டு அருகமைப்பள்ளிகளை நிறுவி, தாய்மொழியில் பயிற்றுவித்ததாலேயே கல்வியில் முதன்மை நாடுகளாகப் பின்லாந்தும், தென்கொரியாவும் நிகழ்கின்றன. அத்தகைய கல்வி முறையைத்தான் நாம் தமிழர் கட்சி தனது ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் வலியுறுத்துகிறது. முன்னேறிய மேலை நாடுகள் யாவும் கல்விக்கூடங்களை நவீனப்படுத்தி கல்வியிலே கோலோச்சிக்கொண்டிருக்கிற சூழலில், இங்கு காற்றோட்டமான வகுப்பறையும், சுகாதாரமான கழிப்பறையும், விளையாட்டுத்திடலும், அனைத்துப் பாடங்களுக்குமான ஆசிரியருமே பெரும் கனவாக இருக்கிறது. 

just before naam tamilar party leader seeman condemned school education minister

இத்தகைய அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் உருவாக்க முனையாதத் தமிழக அரசு வெறுமனே தேர்வின் மூலம் மாணவர்களைத் தரப்படுத்த எண்ணுவது என்பது ஆகப்பெரும் மோசடி. இந்தியாவில் நான்கு கோடியே எழுபது இலட்சம் பேர் பத்தாம் வகுப்பில் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டிருப்பதாக 2016ஆம் ஆண்டு புள்ளிவிபரம் கூறுகிறது. அவ்வாறு படிப்பைத் தொடர முடியாமல் போவதற்குரிய முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக மனஅழுத்தம் தரும் பாடச்சுமையைக் குறிப்பிடப்படுகிறது அவ்வறிக்கை. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகிற பதின்பருவப் பிள்ளைகளே தேர்வுபயத்தாலும், தேர்வில் மதிப்பெண் குறைவதாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அத்தகைய நிலையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினைக் கொண்டு வருவது நிலையை மேலும் சிக்கலாக்கும் பேராபத்து. முதிர்ச்சியோ, பக்குவமோ அற்ற வயதில் பொதுத்தேர்வு வைத்து அவர்களைப் பீதியடையச்செய்வது என்பது கல்வியைத் தொடராது பாதியிலேயே அவர்கள் இடைநிற்றல் செய்வதற்கே வழிவகுக்கும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது அவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதற்கும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது கல்லூரியைத் தேர்வுசெய்வதற்குமான ஒரு அளவீடாகக் கொள்ளப்படுகிறது. அதிலும் தற்போது நீட் போன்ற தேசிய தகுதித்தேர்வுகளைக் கொண்டு வந்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே தேவையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

just before naam tamilar party leader seeman condemned school education minister

இத்தகைய சூழலில், எவ்விதத் தேவையுமற்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களை கல்வியிலிருந்து வடிகட்டி உயர்நிலைக் கல்வியையே நிறைவுசெய்யாத நிலைக்கு இட்டுச்செல்லும் சதித்திட்டமே! தொடக்கக் கல்வியிலும், உயர்நிலைக்கல்வியிலும் தன்னிறைவை எட்ட முடியாத இந்நாட்டில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினைக் கொண்டு வருவது என்பது பொதுத்தேர்வுகளின் பெயரால் குழந்தைகள் மீது செலுத்தப்படும் ஆகப்பெரும் வன்முறையாகும். இது உளவியலாக அவர்களைச் சிதைத்து அவர்களது தனித்திறன்களையும், சமூகப்பார்வையையும் முற்றிலும் அழித்தொழிக்கும் கொடுஞ்செயல். ஆகவே, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வரும் இம்முறையினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறது, என சிமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios