ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை என்பது ஒரு கண் துடைப்பு நாடகம் எனவும், திமுக கோரிக்கை விடுத்தபோது அமைதிகாத்தவர்கள் ஒபிஎஸ், இபிஎஸ் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் எனவும், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் எனவும் பன்னீர் அணி கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதைதொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.  

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை என்பது ஒரு கண் துடைப்பு நாடகம் எனவும், திமுக கோரிக்கை விடுத்தபோது அமைதிகாத்தவர்கள் ஒபிஎஸ், இபிஎஸ் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் மரணம் வரை ரகசியங்களை மறைத்தார்கள் எனவும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அமைதியாக இருந்தவர் ஒபிஎஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.