இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் உட்பட 49 பேர் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்து அமைப்பினர் வலுவாக உள்ள பகுதிகளில் ஒன்றாக கோயம்புத்தூர், திருப்பூர் சரகம் விளங்குவதால் அவை கூடுதல் கவனத்துடன் பாதுகாக்கபடுகின்றன.

இந்தநிலையில் மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் பெரியய்யா உத்தரவின்பேரில் மேற்கு மண்டல எல்லைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி நரேந்திரன் நாயர் மேற்பார்வையில் கோவை மாநகர ,மாவட்ட காவல் எலைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் மாநகர எல்லையில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இவர்கள் ரயில் நிலையம்,உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை,அனைத்து பேருந்து நிலையங்கள் உட்பட உக்கடம், ஆத்துப்பாலம், டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உள்ள 11 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட புறநகரபகுதிகளிலும், மாவட்ட எல்லைகளிலும் என மொத்தம் 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், சிஆர்பிஎஃப் போலீசாரும் இனைந்து சுமார் 70 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.