கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி அதிரடி இடமாற்றம்.! பீதியில் முக்கிய தலைகள் !!
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்களிடமும், அதிமுகவை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அதிமுகவைச் சேர்ந்த சஜீவனிடம் கோவை காவலர் பயிற்சி மையத்தில் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி முத்துசாமி மேற்பார்வையில் தனிப்படை போலீசாரால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காலை 11 மணியளவில் துவங்கிய இந்த விசாரணையானது சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து வந்த சஜீவன் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார். சஜீவன் அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இரண்டாவது முறையாக நேற்று விசாரணை நடத்தி உள்ளனர். சமீப நாட்களாக கொடநாடு விசாரணை சூடு பிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 58 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொடநாடு வழக்கை விசாரித்த போது சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தவர் என்பது குறிபிடத்தக்கது. தற்போது இவர் தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இனி கொடநாடு வழக்கு விசாரணை இவர் தலைமையில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.