ஜெயலலிதா மகன் என கூறி போலி பத்திரங்களை தயார் செய்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணசாமி என்பவர் நான்தான் ஜெயலலிதாவின் மகன் என்றும், அவரது சொத்துக்கள் எனக்கே சொந்தம் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி, நான் ஈரோட்டில் ஜெயலலிதாவின் தோழி வசந்தாமணி வீட்டில் வசித்து வருகிறேன்.

எனது தாயார் ஜெயலலிதாவை கொன்றவர்கள் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான்.

ஜெயலலிதாவிற்கு நான் ஒரே மகன் என்பதால் அவரின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தம்.

எனக்கும் எனது வளர்ப்பு தாயார் தந்தைக்கும் தகுந்த பாதுக்கப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு போலீசார் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று போலீசார் பதில் மனுதாக்கல் செய்தனர்.

அதில், ஜெயலலிதாவின் மகன் என கிருஷ்ணமூர்த்தி போலி பத்திரம் தயார் செய்துள்ளார் எனவும், கிருஷ்ணமூர்த்தி வசந்தாமணி மகன் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரிக்க குற்றபிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் பிறந்த மகள் நான் என பிரியா மகாலட்சுமி என்ற பெண் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மோசடி வழக்குகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.