காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி'யின்  ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 3 வாரங்களுக்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ரிபப்ளிக் டிவி'யின் உரிமையாளரும் அந்தத் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி, மகாராஷ்டிர மாநிலத்தில் 2 சாதுக்கள் கொல்லப்பட்டது விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைதி காப்பது ஏன் என்று விமர்சனம் செய்தது சர்ச்சையானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் தன் மனைவியுடன் காரில் அர்னாப் சென்றார். அப்போது அவரை பைக்கில் வழிமறித்த இரண்டு பேர் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயற்சித்தனர். ஆனால், அர்னாப்புடன் பாதுகாப்பு வந்த அவருடைய பாதுகாவலர்கள், பதில் தாக்குதல் நடத்தி இருவரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தல்படிதான் வந்தோம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை வைத்து அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்தியை மிகக் கடுமையாகத் தாக்கி வீடியோ வெளியிட்டார். இந்த விவகாரத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சோனியா காந்தியை அவதூறாகப் பேசிய அர்னாப் மீது பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸார் புகார் அளித்தனர். வெறுப்பைப் பரப்புதல், வெவ்வேறு மதங்களிடையே பகைமையை ஊக்குவித்தல் அவதூறு செய்திகளை பரப்புவதன் மூலம் தவறான தகவல்களைத் தெரிவித்தல் போன்ற பிரிவுகளில் புகார் அளிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யக்கோரியும், கைது செய்ய தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அர்னாப் கோஸ்வாமியை 3 வாரங்களுக்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர்.