அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் மூத்த பத்திரிகையாளரான அன்பழகனின் மக்கள் செய்தி மையம் பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

நேற்று மக்கள் செய்தி மையம் அரங்கை மூடச் சொல்லி புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் அன்பழகனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அதற்கு அவர் அரங்கை மூடுவதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாகக் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் சென்னை மாநகரக் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர். 

இந்தப் புகாரின் அடிப்படையில் ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இன்று அதிகாலை 5 மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். இவரது கைதுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;- புத்தகக் கண்காட்சியில் அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மேலும், அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும் என கூறியுள்ளார்.