தஞ்சை பெரிய கோயில் கட்டியதில் காட்டப்பட்ட அக்கறையை மக்களின் இன்றியமையாத மருத்துவமனைகளுக்குக் காட்டாதது ஏன்? என நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஜோதிகாவுக்கு ஆதரவாக  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நம் நாட்டில் உள்ள சிலர் விளம்பரம் தேடுவதற்காகவோ அல்லது மதவெறியைப் பரப்பவோ, இந்து அமைப்பு என்ற பெயரால் ஏதாவது செய்தி எங்காவது வராதா என்று கழுகுக் கண் போல் காத்திருக்கின்றனர்.

ஒரு திரைப்படப்பிடிப்புக்காக தஞ்சை சென்ற நடிகை ஜோதிகா, அங்குள்ள அரசு மருத்துவமனையைச் சென்று பார்த்துள்ளார். அங்கே நோயாளிகள் பகுதியை பார்த்த அவர், குழந்தைகளுக்குக்கூட உரிய இடம் ஒதுக்கி கவனிக்க முடியாமல், மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்துக் கலங்கியுள்ளார்.

வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் இந்த பெரியக் கோயில் எதிரில் இப்படி ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையா? என்பது அவரது வேதனையாக இருந்த காரணத்தினால், அக்கோயில்களுக்கு நிகரான மருத்துவமனைகள் இருக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதனைத் திரித்துக் கூறி, உடனே அவருக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை கட்டியெழுப்பி, சில மதவெறியர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதில் என்ன பொருள் இருக்கிறது?

மக்களின் அவதியைப் போக்க அனைவரும் ஒன்றுபட்டு, மதம், ஜாதி, கட்சி இவற்றை மறந்து அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்தோடு இருக்க வேண்டிய நேரத்தில், ஜோதிகா கூறிய கருத்து நோக்கி, அதையும் கூட திரித்து இப்படி ஒரு மதவெறுப்புப் பிரச் சாரத்தைத் தொடங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில், அவர் போன்றவர்கள் மட்டுமல்ல, எவரும் உண்மைகளைக் கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி, நல்லிணக்கத்தை சிதைக்கக் கூடாது" என அவர் தெரிவித்துள்ளார்.