இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்.

இந்து அறநிலையத்துறையின் நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு அனைத்து மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது என தெரிவித்தார்.