J.K.Puthiyavan murder in chennai villivakkam

சென்னை ஐசிஎப் அருகே ரயில்வே தொழிற்சங்க பொது செயலாளர் ஜே.கே.புதியவன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் உறவினர்கள் முன்பு அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

தெற்கு ரயில்வே துறையில் AIOBC என்ற தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜே.கே.புதியவன். சென்னை உள்ளிட்ட நகரங்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஜே.கே.புதியவன், பெயர்பெற்ற தொழிற்சங்கவாதியாக இருந்து வந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் ஐசிஎப் அருகே தனது குடும்பத்தினருடன் ஜே.கே.புதியவன் வசித்து வந்தார். இன்று காலை தனது வீட்டிற்குள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஜே.கே.புதியவன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜே.கே.புதியவனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் ஜே.கே.புதியவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜே.கே.புதியவனின் குடும்பத்தினரும், உறவினர்களும் உடனடியாக ஐசிஎப் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிற்சங்க போட்டி காரணமாக இந்த கொலை நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் ஜே.கே.புதியவனின் கார் டிரைவர் திடீரென மாயமானதால் அவரையும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஜே.கே.புதியவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.