கர்நாடகவில் பிரதமர் மோடி வரும் 15ம் தேதி பேரணியில் பங்கேற்கும் போது, அவரை பேச விடாமல் நாற்காலிகளை தூக்கி எறிந்து இடையூறு செய்யுங்கள் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கர்நாடகாவிற்கு அடுத்த மாதம் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவை கைப்பற்ற பாஜகவும் காங்கிரஸும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. பரஸ்பரம் குற்றச்சாட்டு, விமர்சனங்கள் என பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், பாஜகவிற்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி கர்நாடகாவில் பிரசாரம் செய்து வருகிறார். மத்திய பாஜக அரசின் வாக்குறுதிகள், தோல்விகள் உள்ளிட்டவற்றை கூறி பிரசாரம் செய்துவருகிறார்.

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ் மேவானி, பெங்களூருவில் வரும் 15ம் தேதி பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்கிறார். அந்த பேரணியில் அவரை கர்நாடக மக்கள் பேசவிடக்கூடாது. நாற்காலிகளை தூக்கி எறிந்து இடையூறு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் போட்டியிடும் போது, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறேன் என்று மோடி இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்தாரே அது என்ன ஆயிற்று என்று கேளுங்கள். அதற்கு பதில் அளிக்காவிட்டால், பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இமயமலையில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்லட்டும்.

நாட்டின் தென் மாநிலங்களில் பாஜகவை நுழைய அனுமதிக்காதீர்கள். கர்நாடக மாநிலத்திலும் பாஜக வெற்றி பெற மக்கள் அனுமதி அளிக்கக்கூடாது என பேசினார்.

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கும், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்கும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரின் சர்ச்சைப் பேச்சு தொடர்பான வீடியோ ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்து புகார் கொடுத்தனர். சித்தரதுர்கா தொகுதி தேர்தல் அதிகாரி டி.ஜெய்ந்த் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் மேவானியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.