Jeyakumar explained to Alva
மஸ்கோத் அல்வா என்பது தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உடலுக்கு அனைத்து வகை சத்துக்களை வழங்கும் பொருட்களைக் கொண்டதுதான் என்றும், அதேபோல் ஆளுநரின் உரை மிக சிறந்த உரை என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின், ஆளுநரின் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை குறித்த எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. அரசுக்கு வருவாய் குறைந்து நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதை ஆளுநர் உரையின் மூலம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.
ஸ்டாலின் கூறிய மஸ்கோத் அல்வா குறித்து இன்று சட்டப்பேரவையில் வாதங்கள் நடைபெற்றன. ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும்போது, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையை மஸ்கோத் அல்வா என்று கூறியிருந்தார்.
திருநெல்வேலி அல்வா கேள்விப்பட்டிருக்கிறேன்! மஸ்கோத் அல்வா என்றால் என்ன? இது குறித்து கூகுளில் தேடிப் பார்த்தேன். ஆனால் எனக்கு அர்த்தம் கிடைக்கவில்லை என்றார்.
ஆளுனரின் உரை என்பது மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களைக் கொண்ட பீம்பூஷ்டி அல்வா என்றார். பீம்பூஷ்டி அல்வா மதுரையில் கிடைக்கும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நானும் தேடிப்பார்த்தேன், மஸ்கோத் அல்வா என்பது தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உடலுக்கு அனைத்து வகை சத்துக்களை வழங்கும் பொருட்களைக் கொண்டதுதான். இதைத்தான் எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
எனவே, மக்களுக்கான நலத்திட்டங்களைக் கொண்ட மிக சிறந்த உரையே ஆளுநர் உரை என்று ஸ்டாலினும் கூறியிருக்கிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.
அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். ஆர்.கே.நகரில் யார் அல்வா வழங்கியது என்று யோசித்து பார்த்தேன். கடைசியில் ஆளும் அரசுதான் அல்வ கிண்டி வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளதாக கூறினார்.
இதனை இடைமறித்த அமைச்சர் தங்கமணி, நாங்கள் யாரும் மக்களுக்கு அல்வா வழங்கவில்லை. மக்கள்தான் உங்களுக்கு அல்வா வழங்கியுள்ளார்கள். திருமங்கலத்தில் நீங்கள்தான் அல்வா வழங்க ஆரம்பித்தீர்கள் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, திருமங்கலத்துக்கு முன்னரே காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் அந்த அல்வா தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தது நீங்கள்தான் என்றும் வரலாற்றை மறக்க வேண்டாம் அமைச்சரே என்றும் கூறினார். இதனால் சட்டப்பேரவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.
