மாநிலம் முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில்  நகைக்கடன் நிறுத்தம் என்பது மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் செயல் என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்  சம்மேளனம். (சிஐடியு) கண்டித்துள்ளது.  இதுகுறித்து  அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் நகைக்கடன் திடீரென ஒரு குறுஞ்செய்தி மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கூட்டுறவுத்துறை அதிகாரிகளால்  வெறும் குறுஞ்செய்தி வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஆறுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டுள்ளனர். சிறு குறு தொழில் முனைவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விவசாயிகளுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக நகைக்கடன் தான் உதவி வருகிற, இந்நிலையில் தற்போது கூட்டுறவு துறை எடுத்துள்ள நடவடிக்கையினால் விவசாயிகளின் வாழ்நிலை பெரிதும் பாதிக்கும். சிறுகடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டு அனைத்து முறைசாரா தொழிலாளர் இன்றைக்கு வேலை இழந்துள்ளநிலையில் மக்களின் உடனடி தேவைகளுக்கு உதவி செய்யக்கூடிய நகைக்கடனை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்துவது மக்களை வஞ்சிப்பதாகும். 

ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் இத்தகைய போக்கினை அரசு கைவிட வேண்டும். அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் நகைக்கடன் வழங்குவதை உறுதி செய்திடவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி கொரானா காலத்தில் நகை கடனுக்கான நிர்ணயித்துள்ள வட்டிவிகதத்திலேயே மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோருகிறது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.