ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதலமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மக்கள் நலனுக்காக மாநிலத்திலும், மத்தியிலும் தங்களது கட்சி  பாடு படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 

அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 250 இடங்களுக்கு மேல் கிடைக்கக் கூடாது என்றும், அப்போது தான் மோடிக்கு ஆதரவு அளித்து, அவரை நிர்பந்தப்படுத்தி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.

ஆனாலும் தற்போது பாஜக முழு பலத்துடன் ஆட்சி அமைத்திருந்தாலும், மத்திய அரசிடம் போராடி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.