யாரோ ஒருவரின் சிலையை எப்படி ஜெயலலிதாவின் உருவம் என தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெ. சிலை குறித்து ஜெ.தீபா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா பேரவை அமைப்பின் தலைவருமான ஜெ.தீபா, பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

ஜெ.தீபாவிடம், உங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் உள்ளனவே? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெ.தீபா, இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது. போலி வழக்குகள் பொய் வழக்குகள் என் திட்டமிட்டுப் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. இதுநாள் வரை நான் கொடுத்த புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.

தமிழக அரசின் மாநிய விலை ஸ்கூட்டர் திட்டம் குறித்து பேசிய அவர், ஜெயலலிதாவின் கனவு திட்டமான இதை, பிரதமடர் மோடியை வைத்து தொடங்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார். முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ இதனை தொடங்கி வைத்திருக்கலாம் என்றார்.

மாநில அரசின் திட்டத்தை இன்னொரு கட்சியின் தலைவரான பிரதமர் தொடங்கி வைத்திருப்பது தவறு. இவர்கள் தமிழக அரசை ஆட்டிப்படைக்கிறார்கள். இதற்குமேலேயும் நாம் பொறுத்துக் கொண்டிரக்க முடியாது. மத்திய பாஜக மறைமுகமாக இல்லை; நேரடியாகவே தமிழகத்தில் ஆட்சி செய்கிறது என்றார். முதலமைச்சரையும், துணை
முதலமைச்சரையும் பதவி விலக வைத்துவிட்டு, பாஜகவை நேரடியாக ஆட்சி நடத்த வேண்டியதுதானே என்று காட்டமாக கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை குறித்த கேள்விக்கு, ஜெயலலிதாவின் முகம் எவ்வளவு அழகானது. யாரோ ஒருவரின் சிலையை வைத்துவிட்டு, இது அத்தையின் சிலை என்கிறார்கள். யாரோ ஒருவரின் சிலையை எப்படி அம்மாவின் உருவம் என தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.