J.Deepa Condemned
மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று என்றும், தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை அல்ல என்றும் ஜெ.தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காந்திய மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் என்று கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல், நடிகர் கமல் ஹாசனும், தியானம் செய்வது கடமை என்றால் எழுந்து நிற்பதும் கடமைதான் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜெ.தீபா தனது பேஸ்புக் பக்கத்தில், கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று. தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை அல்ல. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும். தியானம் கலைப்பீராக... என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
