தேர்தல் என்று வந்துவிட்டால் நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் இணைவது என்பது எப்போதுமே வாடிக்கைதான். பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சியில் சேர்ப்பதில் போட்டி போடுவார்கள். இந்நிலையில் நடிகை  ஜெயசுதா நேற்று திடீரென ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அரங்கேற்றம், அபூர்வராகங்கள், நினைத்தாலே இனிக்கும், செக்கச்சிவந்த வானம் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஜெயசுதா. இவர் முன்பு செகந்திராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் அவர், பேசும்போது, நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திட்டம் எதுவும் இல்லை என்றும், தலைவர்களுடன் இணைந்து கட்சி பணியாற்றுவேன் என்றும்  தெரிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே நடிகை ரோஜா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.