ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச்செயலாளர்கள், போலீஸ் உயரதிகாரிகள், சசிகலா உறவினர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் வரும் 18-ம் தேதி ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மரணத்திற்கு நீதி கேட்டு தர்மயுத்தம் நடத்திய நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரம் உள்ளதா? சிகிச்சையில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருந்ததா? என ஓ.பி.எஸ்சிடம் ஆணையம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.