இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமல்ல! நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்...
2012_வாக்கில் ஒரு நாள் அ.தி.மு.க. தலைமை நிலையத்தில்  பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கழக நிர்வாகிகளுக்கான கூட்டம் ஒன்று நடைபெற இருந்தது. அனைவரும் கூடிவிட்டனர் ஜெ.,வின் வருகைகாக வெயிட்டிங். அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என்று பொங்கி வழிந்த அந்த அரங்கத்தில் கலகலவென ஒரே பேச்சு சப்தம். போயஸ் இல்லத்திலிருந்து ஜெ., கிளம்பிவிட்டதாக தகவல். அரங்கத்தினுள் நிர்வாகிகளின் கலகலப்பு நேரமாக ஆக அதிகரித்துக் கொண்டே போனது. 

சட்டென்று எழுந்தார் அவைத்தலைவர் மதுசூதனன். நேராக சென்று மைக்கை எடுத்து, ‘மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!’ என்று சொல்லிவிட்டு மைக்கை வைத்துவிட்டார். அவ்வளவுதான், அவ்வளவேதான்! ஆசிரியரின் பிரம்பு சப்தத்தை கேட்டு சைலண்டான குழந்தைகள் போல் வாய்மூடிக் கொண்டார்கள் அத்தனை பேரும். அமைச்சர்கள், மா.செ.க்களுக்கு கரு விழி கூட ஆடவில்லை. 

இதுதான் இதேதான் ஜெ., வாழ்ந்தபோது இருந்த அ.தி.மு.க. இராணுவம் தோற்றுவிடும் அவர் கட்சியை சிந்தாமல் சிதறாமல் நடத்திய பாங்கிற்கு. சட்டமன்ற சமயங்களில் அவர் தலை வலது புறம் திரும்பினால் என்ன அர்த்தம், இடது புறம் திரும்பினால் என்ன அர்த்தமென்பது பன்னீர் செல்வத்துக்கு புரியும். பொதுக்கூட்ட மேடைகளில் ‘அம்மா! அம்மா!’ என ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள், அவர் மைக்கை பிடித்து தொண்டையை செருமியதும் அடங்கி, ஒடுங்கிவிடுவார்கள். மக்கள் நலத்திட்ட மேடைகளில் ஒரு பார்வை பார்த்தால் போதும் அடுத்த நொடியில் அதை புரிந்து நடந்து, செய்து முடிப்பவர்தான் அடுத்த நாளும் மந்திரியாய் தொடர முடியும். இப்படி தன் கட்சியையும், ஆட்சியையும் இன்ச் பை இன்ச் கட்டுக்குள் வைத்திருந்தார். 

அதனால்தான் வெளிக்காற்று கூட உள்ளே நுழையாத வண்ணம் 75 நாட்கள் அவர் அப்பல்லோவின்  தனி பிளாக் சுவர்களில் அடைந்து கிடந்தபோதும் கூட ஒரு நிர்வாகியென்ன, ஒரு தொண்டன் கூட கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடக்கவில்லை. இதனால்தான் கட்டுப்பாட்டுக்கு பெயர் போன ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழியே அரசியலுக்கு வந்த பா.ஜ.க.வின் தலைவர்கள் ஜெயலலிதாவின் ஆளுமையை பார்த்து வாயடைத்துப் போனார்கள். 

இப்பேர்ப்பட்ட அ.தி.மு.க.வின் கட்டுப்பாடும், கெளரவமும் இன்று தலைகீழாய் கவிழ்ந்து கிடக்கிறது. ஜெ., மரணத்தின் பின் அக்கட்சி அணியணியாய் பிரிந்த கதையை சலிக்க சலிக்க கேட்டாச்சு. 

’என்னதான் எங்களுக்கே சவால் விடுற அளவுக்கு நீங்க கோஷ்டி கோஷ்டியா பிரிஞ்சாலும் கூட, உட்கட்சிக்குள்ளே சண்டை போட்டு, வேட்டிய கிழிச்சு, மண்டையை உடைச்சுக்குறதுல எங்களை மிஞ்சவே முடியாது.’ என்று அ.தி.மு.க.வை பார்த்து நய்யாண்டி செய்த காங்கிரஸே களேபரமாகும் வகையில் அடிதடி கோதாவிலும் இறங்கிவிட்டனர் ஆளுங்கட்சியினர்.

குறிப்பாக பன்னீர் செல்வம் பழனிசாமியுடன் இணைந்த பிறகுதான்  இந்த குஸ்திகள் அதிகமாகி இருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் தினகரனின் உருவபொம்மையை பன்னீர் கோஷ்டியும், பன்னீரின் உருவ பொம்மையை தினகரனும் எரிக்க முயன்று மோதல் உருவானது. பல இடங்களில் போலீஸின் ஆசியுடன் டி.டி.வி.யின் உருவபொம்மை மட்டுமே சாம்பலானது. இதில் அவரது ஆதரவாளர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். 

இனி உருவ பொம்மை எரிக்க முயன்றால் போலீஸ் விடாது, பன்னீருக்கு எதிராக வேறு வகையில் களமிறங்க வேண்டிதான் என்று முடிவெடுத்தார்கள். அந்த வகையில் நேற்று இரவில் மதுரை விமான நிலையம் வந்த பன்னீரை நோக்கி தினகரனின் ஆதரவாளர்கள் ஓடிச்சென்று ’துரோகி, நன்றி மறந்த பன்னீர்’ என கண்டன கோஷம் எழுப்பினர். ஆனால் துணை முதல்வரான பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், டி.டி.வி.யின் ஆட்களை தடுத்து மடக்கி பின்னே தள்ளிச்சென்றனர். 

தினகரனின் ஆட்கள் திமிற, ஒரு கட்டத்தில் மளமளவென கைகளை வைத்துவிட்டது போலீஸ். என்ன இருந்தாலும் தாங்களும் ஆளும் அ.தி.மு.க.வை சேர்தவர்கள் என்பதால் அவமானம் தாங்காத தினகரன் டீம் “கவர்னர் சொன்ன மாதிரி இது உட்கட்சி விவகாரம். இதுல நீங்க எதுக்குய்யா தலையிடுறீங்க?” என்று கொதித்துக் கேட்டனர். ஆனால் அலட்சியமாக மேலும் சில அடிகள் நெட்டித்தள்ளியது போலீஸ். கையோடு சிலரை ஜீப்பிலும் தூக்கிப் போட்டு சென்றுவிட்டனர். பன்னீரை நோக்கி கண்டனம் காட்டி தினகரன் டீம் ஓடி வந்தததை கேள்விப்பட்டு ‘தி.மு.க.வின் கைக்கூலி தினகரா’ என்று பன்னீர் ஆதரவளர்கள் எகிறினர். 

தன் ஆதரவாளர்கள் போலீஸால் தாக்கப்பட்ட விவகாரம் இரவோடு இரவாக டி.டி.வி.யின் காதுகளுக்குப் போக ‘நம்மிடம் அத்துமீறுகிறது போலீஸ். எல்லாம் சில நாளுக்குதான். பார்த்துக்குறேன்.’ என்று சற்றே டென்ஷனாகியிருக்கிறார். 
தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதுக்கு பதிலடி கொடுக்க தினகரன் டீம் தயாராகி வரும் நிலையில், பன்னீரணியோ தினகரனை இனி கண்ட இடத்திலெல்லாம் கண்டித்து கோஷமிடுவதென முடிவெடுத்திருக்கிறது. 

இராணுவத்துக்கே பாடம் சொன்ன ஜெயலலிதாவின் கட்சி மத யானை நுழைந்த பாத்திரக்கடையாகி கிடக்கிறது.
இனி அ.தி.மு.க.வின் பெருமை பழைய செய்தித்தாள்களில் மட்டுமே வாழும் போல!